சார் -- பதிவாளர்கள் அலுவலகம் வரும் 30ம் தேதி செயல்படும்
சார் -- பதிவாளர்கள் அலுவலகம் வரும் 30ம் தேதி செயல்படும்
ADDED : மார் 28, 2024 12:25 AM
சென்னை:அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும், வரும், 30ம் தேதி சனிக்கிழமை செயல்படும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக நிதியாண்டு முடியும் நாளில், பத்திரப்பதிவு பணிகளை முடிக்க மக்கள் ஆர்வம் காட்டுவர். குறிப்பாக, வங்கிகள் வீட்டுக்கடன் தொடர்பான கோப்புகளை, நிதியாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு செயல்படும்.
இதனால், நிதியாண்டு இறுதி நாளான மார்ச், 31ல் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். இந்த ஆண்டு, மார்ச், 31 ஞாயிற்றுக்கிழமை என்பதால், மார்ச், 30 சனிக்கிழமை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்பட வேண்டும் என, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு அனுமதியின் பெயரில், சனிக்கிழமைகளில் செயல்படும், 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் மட்டுமின்றி, அனைத்து அலுவலகங்களும் வரும் சனிக்கிழமை செயல்பட வேண்டும்.
இதற்கு தேவையான டோக்கன்கள் வழங்க, இணையதளத்தில் உரிய ஏற்பாடுகளை, டி.சி.எஸ்., பணியாளர்கள் வாயிலாக மேற்கொள்ளலாம்.
சனிக்கிழமை மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுக்கு, வழக்கமான கட்டணத்துடன், விடுமுறை தின பதிவுக்கான கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக பதிவுத்துறை தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

