ADDED : மே 14, 2024 11:19 PM
சென்னை:'கோவில் விழா நடத்துவதற்கு, தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டுவதை ஏற்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு, வளத்தி போலீஸ் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கு, போலீஸ் அனுமதி மறுத்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் உத்தரவை ரத்து செய்து, விழாவின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கும்படி, கேசவன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி கே.குமரேஷ் பாபு பிறப்பித்த உத்தரவு:
கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரிய மனுவை நிராகரித்ததை எதிர்த்து, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை ஒட்டி, நடத்தை விதி அமலுக்கு வந்ததை, நிராகரிப்புக்கு காரணமாக காட்டி உள்ளனர். தற்போது, தேர்தல் முடிந்து விட்டது. கோவில் விழா நடத்த, இத்தகைய காரணங்களை கூறுவதை ஏற்க முடியாது.
எனவே, போலீஸ் அனுமதி மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. சட்டப்படி, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

