ADDED : ஏப் 24, 2024 10:10 PM
சென்னை:தமிழகம் முழுதும் கிராம வாரியாக அனைத்து தெருக்கள் குறித்த விபரங்களையும் பட்டியலாக திரட்டி, 30க்குள் அனுப்ப, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், சர்வே எண் வாரியாக நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு பகுதிக்கும், தெரு வாரியாக வழிகாட்டி மதிப்புகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. பெரும்பாலான பகுதிகளில் புதிய நகர்கள் உருவாகி, புதிய தெருக்களும் வந்துள்ளன. இதுபோன்ற புதிய தெருக்களுக்கு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்படாமல் உள்ளது.
இதனால், சொத்து பத்திரங்களை பதிவு செய்யும்போது தெரு மதிப்பை கடைபிடிப்பதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. தெரு அடிப்படையிலான வழிகாட்டி மதிப்புகள் இல்லை என்பதால், சர்வே எண் மதிப்புகள் கடைபிடிக்கப்படுகின்றன.
இது பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட வழி வகுக்கிறது. அதனால், கிராம வாரியாக தெருக்களின் முழு விபரங்களையும் திரட்டி, விடுபட்ட தெருக்களுக்கு மதிப்பு நிர்ணயிக்க, பதிவுத் துறை முடிவு செய்துள்ளது.
பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிராம வாரியாக தெருக்களின் விபரங்களை, பட்டியல் வடிவில் திரட்டி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சார் பதிவாளர்கள், அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் எழுதி, தெரு விபரங்களை திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகளை, வரும், 30க்குள் முடிக்க, சார் பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

