ADDED : ஜூலை 09, 2024 06:34 AM

சென்னை : ஓராண்டாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 44வது முறையாக நீட்டித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால், கடந்தாண்டு ஜூனில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் உள்ளார். அவரது காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று பிற்பகலில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின், அவரின் நீதிமன்ற காவலை, 44வது முறையாக, நாளை வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
'அமலாக்கத்துறை வழக்கில் இருந்து, தன்னை விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும்; ஆவணங்கள் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம்; விடுபட்ட வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும்' என, செந்தில் பாலாஜி தரப்பில், மேலும் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, விடுபட்ட வங்கி, 'செலான்'கள் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், செந்தில் பாலாஜி கணக்கு வைத்திருந்த கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளரின், 2022 பிப்., 22 தேதியிட்ட கடித ஆவணங்களை அவருக்கு வழங்கவும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கும் மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரிய மனுவை, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக, ஜூலை 10க்கு தள்ளிவைத்தார்.

