ADDED : செப் 13, 2024 06:19 AM

வானுார்: சர்வதேச நகரமான ஆரோவில்லில் வாழ்வியல் முறைகள் குறித்த இரண்டு நாட்கள் பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
ஆரோவில் அறக்கட்டளை, பாரத் நிவாஸ் இணைந்து ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கம் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று அரவிந்தர் ஆசிரம குழுவினர், ஆரோவில் குடியிருப்பு வாசிகளின் பிள்ளைகள், அறக்கட்டளை நிர்வாகிகள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், உடல், மன உணர்வுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , தன்னுணர்வுடன் கூடிய வாழ்வியல் முறைகள், தினசரி செயல்பாடுகளில் மனக்கட்டுபாட்டின் அவசியம், அவசரமில்லாமல் உணவு அருந்துதல், மொபைல் மற்றும் டிவி., பார்க்காமல் உணவு அருந்துவது, குழுவாக அமர்ந்து உணவு அருந்துதல், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அரவிந்தர் ஆசிரமத்தை சேர்ந்த ஸ்ரீ கவ்ரவ் சோலங்கி பயிற்சியை வழி நடத்தினார். வாழ்வியல் முறைகள் குறித்த ஆவணப்படம் திரையிடப் பட்டது.
பயிற்சியில் பங்கேற்றவர்கள், மாத்ரி மந்திர் எதிரில் கூட்டு தியானம், நடைப்பயிற்சி மேற் கொண்டனர். ஏற்பாடுகளை ஆரோவில் பவுண்டேஷன் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோலிகா கங்குலி செய்திருந்தார்.

