தமிழக வனப்பகுதி வழியாக ரோடு; கண்ணகி கோயில் பிரச்னைக்கு தீர்வு எதிர்பார்ப்பில் -தமிழக பக்தர்கள்
தமிழக வனப்பகுதி வழியாக ரோடு; கண்ணகி கோயில் பிரச்னைக்கு தீர்வு எதிர்பார்ப்பில் -தமிழக பக்தர்கள்
ADDED : ஏப் 22, 2024 06:07 AM

கூடலுார் : தமிழக எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவின் போது கேரளாவின் கெடுபிடிகளை தவிர்க்க தமிழக வனப்பகுதி வழியாக ரோடு அமைப்பதே தீர்வு என தமிழக பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் வரலாற்று சிறப்பு மிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., துாரம் தமிழக வனப்பாதை உள்ளது. இதுதவிர கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி.மீ., தூரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் இங்கு விழா கொண்டாடப்படும். இக்கோயிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் அம்மாநில அரசின் அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிகமாக நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதை பயன்படுத்தி கோயில் கட்டுப்பாடு முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வரும் திட்டத்தை கேரளா செயல்படுத்தி வருகிறது.
சர்வே பணி
கோயிலின் முகப்பு வாயில் தேனி மாவட்டத்தை நோக்கியே அமைந்துள்ளது. 1817 ல் பழமையான கிழக்கு இந்திய கம்பெனி சர்வேயும், 1893, 1896 ல் நடத்திய சர்வேயிலும், 1913, 1915ல் வெளியிட்ட எல்லைக்காட்டும் வரைபடங்களிலும் கோயில் தமிழக வனப்பகுதியிலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1976ல் தமிழ்நாடு, கேரள அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கோயில் 40 அடி தூரம் தள்ளி தமிழக வனப்பகுதியில் இருப்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன் பின் கேரள வனப்பகுதியில் அவசர அவசரமாக வாகனங்கள் செல்வதற்கான பாதை அமைக்கப்பட்ட பின் கேரளாவின் கெடுபிடி துவங்கியது.
ரோடுதான் தீர்வு
கோயிலில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று கேரள வனப்பகுதி வழியாக பக்தர்கள் அதிகம் செல்வதால் அம்மாநில வனத்துறை பல கெடுபிடிகளை செய்து பக்தர்களை புண்படுத்துகிறது. தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து வாகனங்கள் செல்ல ரோடு அமைப்பதே இப்பிரச்னைக்கு தீர்வு என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மாதந்தோறும் வழிபட கோரிக்கை
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: தமிழக வனப்பகுதி வழியாக இக்கோயிலுக்கு செல்ல பல ஆண்டுகளுக்கு முன் ரோடு இருந்தது.
காலப்போக்கில் அவை சீரமைக்கப்படாததால் நடைபாதையாக மாறியது. 35 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் கோயில் வரை ரோடு அமைக்க தமிழக அரசால் சர்வே பணி நடந்தது.
தொடர் நடவடிக்கை இல்லாததால் அப்பணி நடக்கவில்லை. சமீபத்திலும் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வே நடந்தன. பளியன்குடி வழியாக 6.6 கி.மீ., தூரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ., தூரமும் ரோடு அமைக்க வாய்ப்புள்ளது. ரோடு போடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.

