ADDED : ஏப் 21, 2024 12:30 AM

திருப்பூர்:''மக்களாட்சி திருவிழா தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. இது, மக்களின் வெற்றி,'' என ஹிந்து முன்னணி கூறியுள்ளது.
இது குறித்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் பொறுப்புணர்ந்து தங்கள் கடமையை செய்துள்ளது வரவேற்கத்தக்க மாற்றம்.
தமிழகம் தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். தேர்தலில், 100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டும் என்பது நம் லட்சியம். தேர்தல் கமிஷனும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
அதே நேரத்தில், சில இடங்களில் ஒட்டுமொத்தமாக ஓட்டுரிமை நீக்கப்பட்ட புகார்கள் வந்துள்ளன. வாக்காளர் பதிவேடு சரியான முறையில் கையாளப்படவில்லை. சில இடங்களில் அலுவலர்கள் அலட்சியமாக இருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.
தேர்தல் காலத்தில் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் உள்ளது. அதுவும் கூட, மாநில அரசு ஊழியர்களை கொண்டே நிர்வாகம் செய்வதால் பல குளறுபடிகள் நடைபெறுகின்றன. இது போன்ற குறைகளை தீர்க்க, தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை உரிய காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். அப்போது தான், 100 சதவீத ஓட்டுப்பதிவை நோக்கி செல்ல முடியும்.
வாக்காளர் பட்டியலில் குழப்பம், வெயிலின் தாக்கம் இருந்த போதிலும், தமிழக மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றியதை, ஹிந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

