புதிய ரேஷன் கார்டு வழங்காததால் விண்ணப்பங்களை பரிசீலிக்க தயக்கம்
புதிய ரேஷன் கார்டு வழங்காததால் விண்ணப்பங்களை பரிசீலிக்க தயக்கம்
ADDED : ஜூன் 11, 2024 02:56 AM
சென்னை : ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய ரேஷன் கார்டுகளே இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், லோக்சபா தேர்தல் சமயத்தில், ரேஷன் கார்டு கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க, அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
ரேஷன் கார்டு பெற, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதை, சென்னையில் உணவு வழங்கல் உதவி ஆணையர்களும்; மற்ற மாவட்டங்களில் வட்ட வழங்கல் அதிகாரிகளும் பரிசீலித்து, கார்டு வழங்க ஒப்புதல் தருவர். பின், ரேஷன் கார்டு அச்சிடப்பட்டு பயனாளிகளிடம் வழங்கப்படும்.
தமிழக அரசு, மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, ரேஷன் கார்டு அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்கிறது. எனவே, பலரும் புதிய கார்டு கேட்டு வருவதால், 2023 இறுதியில் இருந்து ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. கடந்த மூன்று மாதங்களாக, ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது, லோக்சபா தேர்தலை காரணம் காட்டி, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து, வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே விண்ணப்பித்த, 2 லட்சம் பேருக்கு கார்டுகள் வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் முடிந்தும் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு, புதிய ரேஷன் கார்டு தராததால் தினமும், 10 - 15 பேர் அலுவலகம் வந்து தகராறு செய்கின்றனர்.
அவர்களுக்கே கார்டுகள் தராத நிலையில், கடந்த மூன்று மாதங்களாக விண்ணப்பித்த நபர்களுக்கு எப்படி வழங்க முடியும்? அதனால், தேர்தல் நேரத்தில் பெற்ற விண்ணப்பங்களை பரீசிலிக்க தயக்கமாக உள்ளது.
புதிய கார்டுகள் எப்போது வழங்கப்படும் என்பதை, மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

