ADDED : ஜூன் 14, 2024 02:10 AM
சென்னை:'பொது அதிகார ஆவண ரத்து, பாகப்பிரிவினை, ரசீது, அடமானம் உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்வதற்கு, டி.ஐ.ஜி., அலுவலக ஒப்புதல் பெற வேண்டும்' என்ற கட்டுப்பாடுகளை தளர்த்தி, பதிவுத்துறை உத்தவிட்டுள்ளது.
ஆவணங்களை பதிவு செய்யும் போது, அது தொடர்பாக தடை எதுவும் உள்ளதா என்பதை, சார் -- பதிவாளர்கள் சரி பார்க்க வேண்டும். இதுபோன்ற ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் போது, வேறு சார் பதிவாளர் அலுவலகத்தில் தடை எதுவும் உள்ளதா என்பதை, டி.ஐ.ஜி., அலுவலகம் வாயிலாக சரிபார்க்க வேண்டும். இதற்காக, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இடையே கடித போக்குவரத்து நடத்த, அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், 'ஆன்லைன்' பத்திரப்பதிவுக்கான, 'ஸ்டார் 2.0' சாப்ட்வேரில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன் பின்னரும், பெரும்பாலான சார் - பதிவாளர்கள், இவ்வகை பத்திரங்களை நிலுவையில் வைப்பதாக, பதிவுத்துறை கவனத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு:
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஆவண ஒப்படைப்பு, அடமானம், கடன் முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும் ரத்து மற்றும் ரசீது, பொது அதிகார ரத்து, குடும்ப நபர்களிடையே மேற்கொள்ளப்படும் பாகப்பிரிவினை பத்திரங்கள் தாக்கலாகும் போது, டி.ஐ.ஜி., அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற வேண்டியதில்லை.
இது தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இவை தவிர, பிற ஆவணங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும். இதற்கான சுற்றறிக்கை அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

