ஊரக பகுதிகளில் 'நமக்கு நாமே' திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
ஊரக பகுதிகளில் 'நமக்கு நாமே' திட்டம் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
ADDED : ஏப் 24, 2024 08:41 PM
சென்னை:நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில், 'நமக்கு நாமே' திட்டத்தை செயல்படுத்த, 100 கோடி ரூபாய்க்கு, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான, வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாக, ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்டத்தை, நடப்பாண்டிலும் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இத்திட்ட பணிக்கான மதிப்பீட்டுத் தொகையில், மூன்றில் ஒரு பங்குக்கு குறையாமல், பொது மக்கள் பங்களிப்பு இருக்க வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி., குடியிருப்புகளை பொறுத்தவரை, பொது மக்கள் பங்களிப்பு தொகை, மதிப்பீட்டு தொகையில், ஐந்தில் ஒரு பங்குக்கு குறையாமல் இருக்க வேண்டும். பொது மக்கள் அல்லது பங்களிப்பை அளித்தவர்கள், அப்பணியை தாங்களாக அல்லது அவர்களின் முகவர் வழியாக செய்ய விரும்பினால், எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், 74 சதவீதம் அனைத்து மாவட்டங்களுக்கும், மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கப்படும். ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் முன்னுரிமை அடிப்படையில் நிதி விடுவிக்க வேண்டும்.
மொத்த ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம், செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்திற்கு, செய்தி, கல்வி மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளுக்கு, 10 சதவீதம் ஒதுக்க வேண்டும். மீதமுள்ள தொகை, மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

