5, 8, 9ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க தடை!: நாளை வெளியாக இருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
5, 8, 9ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க தடை!: நாளை வெளியாக இருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
ADDED : ஏப் 09, 2024 06:28 AM
பெங்களூரு: மாநிலத்தில், 5, 8, 9ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்த அனுமதி கொடுத்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்வுகள் ஏற்கனவே முடிந்த நிலையில், நாளை முடிவுகள் அறிவிக்கப்படவிருந்தன. இவற்றுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இது மாணவர்களையும், பெற்றோரையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
கர்நாடகாவில் தற்போது, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., இரண்டாம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1 - 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையில், 5, 8, 9, பி.யு.சி., முதல் வகுப்புகளுக்கு, 2023 - 24ம் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்துவதற்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், மார்ச் 11ம் தேதி முதல், 18ம் தேதி வரை 5, 8, 9ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த பொதுத் தேர்வுகளை ரத்து செய்யும்படி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ரவி ஆர்.ஹொசமனி, பொதுத்தேர்வுக்கு தடை விதித்தார்.
இந்த தடையை எதிர்த்து, அரசு தரப்பில், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் மேல்முறையீடு செய்தது. அப்போது பொதுத் தேர்வு நடத்தலாம் என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
கோடை விடுமுறை
திட்டமிட்டப்படி, 11, 12ம் தேதியில் இரண்டு பாடங்களுக்கு தேர்வு நடந்தது. இதற்கிடையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். விசாரணை நடத்திய நீதிபதிகள், பொதுத்தேர்வுக்கு தடை விதித்தனர்.
மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை முடிக்கும்படியும் அறிவுறுத்தினர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'இந்தாண்டு 5, 8, 9, பி.யு.சி., முதல் வகுப்புகளுக்கு, மாநில அரசு பொதுத்தேர்வு நடத்தலாம். பாக்கியுள்ள பாடங்களுக்கு மட்டும் நடத்த வேண்டும்' என்று கடந்த மார்ச் 22ம் தேதி தீர்ப்பளித்தனர்.
இதன்படி, 5, 8, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. வரும் 11ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்கும் நிலையில், நேற்று சில பள்ளிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாநிலம் முழுதும் பெரும்பாலான பள்ளிகளில், நாளை தேர்வு முடிவுகள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தயார் நிலையில் இருந்தன.
மன உளைச்சல்
இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கு, நீதிபதி எம்.திரிவேதி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொதுத்தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தார். மேலும், தேர்வு முடிவுகளை வெளியிடவும் இடைக்கால தடை விதித்தார். இது தொடர்பாக, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் வழங்கும்படியும் நீதிபதி திரிவேதி உத்தரவிட்டார்.
பொதுத் தேர்வு தொடர்பாக, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மாறி மாறி பிறப்பிக்கும் உத்தரவுகள், மாணவர்களையும், பெற்றோரையும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன.

