காணாமல் போன குழந்தையை ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் தேடும் போலீஸ்
காணாமல் போன குழந்தையை ஏ.ஐ., தொழில் நுட்பத்தில் தேடும் போலீஸ்
ADDED : மே 21, 2024 03:53 AM

சென்னை: சென்னையில், 13 ஆண்டு களுக்கு முன் காணாமல் போன சிறுமி, தற்போது எப்படி இருப்பார் என, ஏ.ஐ., தொழில் நுட்ப வசதியுடன் படம் வரைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை சாலிகிராமம், மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். அவரது ஒன்றரை வயது மகள் கவிதா, 2011, செப்., 9ல் காணாமல் போனார். குழந்தையை காணவில்லை என விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இதுவரை துப்பு துலக்க முடியவில்லை.
இதனால், இந்த வழக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் துணை கமிஷனர் தலைமையிலான போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள், 13 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனபோது எடுக்கப்பட்ட குழந்தையின் படத்தை பயன்படுத்தி, தற்போது 14 வயது சிறுமியாக கவிதா எப்படி இருப்பார் என்பதை, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக படம் வரைந்துள்ளனர்.
கவிதா குறித்து தகவல் தெரிந்தால், 94444 15815, 94981 79171 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். சரியான தகவல்கள் தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

