ADDED : ஜூன் 01, 2024 05:33 AM

நாகர்கோவில் : கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில், பிரதமர் மோடி காவி உடை அணிந்து தியானத்தை தொடர்கிறார்.
கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பகவதி அம்மனை தரிசித்த பின்னர் தனி படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்றார்.
மலரஞ்சலி
அங்கு, அன்னை சாரதா தேவி, ஸ்ரீ ராமகிருஷ்ணர் படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பின், திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையில் நின்றபடி பார்வையிட்டார். இரவு சிறிது நேரம் தியானத்துக்கு பின், பிரதமருக்காக தயார் செய்யப்பட்டிருந்த அறையில் ஓய்வெடுத்தார்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு எழுந்த பிரதமர் மோடி குளித்து, காவி உடை அணிந்து நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து ருத்ராட்ச மாலையை விரலால் உருட்டியபடி விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார். காலை 6:00 மணிக்கு சூரிய நமஸ்காரம் செய்தார். சிறிய சொம்பில் இருந்த கங்கை தீர்த்தத்தை கடலில் ஊற்றினார்.
விவேகானந்தர் சிலையின் எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து பிரதமர் தியானத்தில் ஈடுபட்டார். மண்டபத்தில் மனதுக்கு இதமான ஓம் என்ற பிரணவ மந்திரம் ஒலித்தது. தியானத்தில் பிரதமர் மவுன விரதமும் மேற்கொள்கிறார்; தியானம் இன்றும் தொடர்கிறது.
இன்று மதியம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று வணங்கிய பின், விருந்தினர் மாளிகைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
சேவை நிறுத்தம்
பிரதமர் வருகையால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் பாதிக்கப்படக்கூடாது என பிரதமர் அலுவலகம் அறிவுறுத்திஇருந்தது.
அதனால், நேற்று காலை வழக்கம் போல் 8:00 மணிக்கு படகு போக்குவரத்து துவங்கியது. பயணியரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு அவர்களுடைய உடைமைகள் அனைத்தும் வாங்கப்பட்ட பின், விவேகானந்தர் பாறை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அலைபேசி மட்டும் வழங்கப்பட்டது. எனினும், 11:30 மணிக்கு படகு சேவை நிறுத்தப்பட்டது.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து மக்களை அனுமதிக்க கூறினாலும், மாநில அரசின் பொறுப்பில் பாதுகாப்பு உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
போலீஸ் கெடுபிடி
கடற்கரையில் உள்ள காந்தி, காமராஜர் மண்டபங்களுக்கு செல்லவும் பயணியருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. கடற்கரையையொட்டி உள்ள தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளும், போலீஸ் கெடுபிடியால் ரத்து செய்யப்பட்டன.

