ADDED : ஏப் 10, 2024 02:52 AM
சென்னை : 'இ- - பைலிங்' முறையில் தொடரும் பிரச்னைகள் மற்றும் குளறுபடி தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலாவை, வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்தாண்டு செப்.,1 முதல், இ- - பைலிங் முறை படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப வசதி மேம்பாடு, ஊழியர் நியமனம் உள்பட, போதிய அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல், இ- -- பைலிங் முறையை அமல்படுத்த, துவக்கம் முதல் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, இ- - கோர்ட் சர்வர் பிரச்னை, இ- - பைலிங் முறையில் தாக்கலாகும் வழக்குகளுக்கு உடனே எண்ணிடப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நீடிக்கின்றன.
இந்நிலையில், இ- - பைலிங் முறையில் நீடித்து வரும் பிரச்னை, குளறுபடிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலாவை, எம்.எச்.ஏ.ஏ., என்ற, மெட்ராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன்.
மெட்ராஸ் பார் அசோசிஷேயன் தலைவர் எம்.பாஸ்கர், லா அசோசியேஷன் தலைவர் பி.செல்வராஜ், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் லுாயிசால் ரமேஷ் உள்ளிட்ட இதர வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில், 'இ- - பைலிங் வாயிலாக, வழக்கு தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் அளவை அதிகரிக்க வேண்டும். இ- - பைலிங் வாயிலாக தாக்கலாகும் மனுக்களுக்கு உடனே எண்ணிடப்பட வேண்டும். அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்னையால், இ- - கோர்ட் சரிவர இயங்குவதில்லை.
ரிட் மனு சார்ந்த ஆவணங்களை ஸ்கேனிங் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஆட்கொணர்வு மனுவை எண்ணிட 15 நாட்களுக்கு மேலாகிறது. உயர் நீதிமன்ற வளாகத்தில், நெட்வொர்க் பிரச்னை நீடிக்கிறது' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

