ADDED : ஏப் 01, 2024 01:55 AM

சென்னை: ரயில் நிலையங்கள், ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் எளிதில் அணுகும் வகையில் இல்லை; ரயில்களிலும் உரிய வசதிகள் இல்லை.
'இந்தச் சட்டப்படி, 2022ம் ஆண்டிலேயே, ரயில் நிலையங்களை மாற்றி அமைத்திருக்க வேண்டும். ஆனால், பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதுகுறித்து மனு அளித்தும், உரிய நடவடிக்கை இல்லை' என்று கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

