பன்னீர்செல்வத்திற்கு குலுக்கலில் கிடைத்தது பலாப்பழம் சின்னம்
பன்னீர்செல்வத்திற்கு குலுக்கலில் கிடைத்தது பலாப்பழம் சின்னம்
ADDED : மார் 31, 2024 03:18 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு குலுக்கலில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் போட்டியிடுகிறார். அவரது வேட்பு மனுவில் முதலில் வாளி, 2வதாக பலாப்பழம், 3வது திராட்சை கொத்து சின்னங்களைகேட்டிருந்தார்.
இந்நிலையில் பன்னீர்செல்வத்தை வீழ்த்துவதற்காக அவரது பெயரைக்கொண்ட 5 பேர் சுயேச்சைகளாக களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களும் போட்டிக்கு இதுபோன்ற சின்னங்களை கேட்டிருந்தனர்.
நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் உட்படமேலும் 2 பன்னீர்செல்வங்கள் உட்பட4 பேர் வாளிசின்னத்தை கேட்டிருந்தனர். இதையடுத்து குலுக்கல் நடந்தது. அதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாகைக்குளம் ஒச்சாதேவர் மகன் பன்னீர்செல்வத்திற்கு வாளி சின்னம் கிடைத்தது. அடுத்தபடியாக பலாப்பழம் சின்னத்தை மற்றொரு பன்னீர்செல்வமும் கேட்டிருந்தால் அதற்கும் குலுக்கல் நடந்தது. இதில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து ராமநாதபுரம் தெற்குகாட்டூர் ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வத்திற்கு கண்ணாடி டம்ளர், பரமக்குடி கங்கைகொண்டான் மலையாண்டி மகன் எம்.பன்னீர்செல்வத்திற்கு பட்டாணி, மதுரை சோலை அழகுபுரம் ஒய்யாதேவர் மகன் பன்னீர்செல்வத்திற்கு திராட்சை, உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.
சின்னம் ஒதுக்கீடை பார்வையிட கலெக்டர் அலுவலகத்திற்குபன்னீர்செல்வம் வந்தார். அறிவிப்பு பலகையில் இருந்த தன்னுடன் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பார்வையிட்டார். சிறிதுநேரம் தேர்தல் அலுவலக அறையில் அமர்ந்து விட்டு சின்னம் ஒதுக்குவதற்கு தாமதம் ஆனதால் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

