பா.ஜ.,வுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பவர் ஸ்டாலின் தான் துாத்துக்குடியில் பழனிசாமி பேச்சு
பா.ஜ.,வுடன் கள்ளக்கூட்டணி வைத்திருப்பவர் ஸ்டாலின் தான் துாத்துக்குடியில் பழனிசாமி பேச்சு
ADDED : மார் 27, 2024 12:25 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, துாத்துக்குடியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
'மிக்ஜாம்' புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, பதவி தான் முக்கியம் என டில்லியில் நடந்த கூட்டணி கட்சி கூட்டத்திற்கு சென்றவர் தான் முதல்வர் ஸ்டாலின். மக்கள் பிரச்னை பற்றி அவருக்கு கவலை கிடையாது.
தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எதுவும் மக்கள் பிரச்னைகளுக்காக வாய் திறப்பதில்லை. அவை தி.மு.க., கூட்டணியில் உள்ளன என்பதை விட தி.மு.க.,விலேயே ஐக்கியமாகி விட்டன என்பதே உண்மை.
ஒரு புயலுக்கே தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியவர் ஸ்டாலின். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் பல புயல்களை கண்டு வெற்றி கண்டோம். தமிழகத்தில் செயல்படாத திமுக அரசு தேவையா; அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் நமக்கு தேவையா என்றும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியோடும் பிரதமரோடும் கள்ளக் கூட்டணி வைத்திருப்பவர் ஸ்டாலின் தான். பதவி வெறி பிடித்த கட்சி அல்ல அ.தி.மு.க., நாங்கள் யாருக்கும் மறைமுக ஆதரவு செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து இருந்தால் பதவி கிடைத்திருக்கும். ஆனால், தமிழக மக்களின் உரிமையை காக்கவே அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக பா.ஜ. கூட்டணியில் இருந்து விலகினோம்.
மத்தியில் பா.ஜ. ஆட்சியிலும், காங்., ஆட்சியிலும் அங்கம் வகித்து பதவி சுகத்தை அனுபவித்த தி.மு.க., கொள்கை கொண்ட கட்சி என கூறுவது வேடிக்கை.
எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடியை, 'கோ பேக் மோடி' என்றும் ஆளுங்கட்சியான பிறகு வெள்ளைக்குடை ஏந்தி, 'வெல்கம் மோடி' என்றும் இரட்டை வேடம் போட்டு வருகிறார் ஸ்டாலின்.
மக்கள் ஸ்டாலினுக்கு, வெள்ளைக்குடை ஏந்திய பொம்மை முதல்வர் என்று பட்டம் கொடுத்துள்ளனர். பிரதமரை நேரில் பார்ப்பதற்கு முன் வீர வசனம் பேசிவிட்டு, நேரில் பார்த்ததும் அவரிடம் ஸ்டாலினும், உதயநிதியும் சரணாகதி அடைந்து விடுகின்றனர்.
அவர்களுக்கு, 'பில்டிங் ஸ்டாட்ராங்: பேஸ்மட்டம் வீக்!'
உள்ளுக்குள் பயம் உள்ளது. வெளியில் காட்டிக் கொள்வது இல்லை. போதைப் பொருள் கடத்தும் ஒரு நபருக்கும், முதல்வர், அமைச்சர் உதயநிதி ஆகியோருடன் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பிய போதும், இதுவரை அவர்கள் விளக்கம் அளிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த தேர்தலில் தி.மு.க.,வின் முகத்திரை கிழிக்கப்படும்.
தேர்தல் பத்திரத்தின் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 656 கோடி ரூபாய் பணம் வசூல் செய்த இயக்கம் தி.மு.க., ஆனால், இவர்கள் மற்றவர்களை குறை கூறி வருவது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. ஊழல் செய்து கிடைத்த பணத்தை வெள்ளை பணம் ஆக்கவே வெளிநாடு போய் முதலீடு செய்ய வருகின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர்., பேசியதாக வெளியான ஆடியோவில் அமைச்சர் உதயநிதியும் முதல்வரின் மருமகன் சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக கூறியது அனைவருக்கும் தெரியும்.
நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி தி.மு.க., நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது நிச்சயமாக 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.

