தி.மு.க.,வில் அனைவரும் அடிமைகள் பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
தி.மு.க.,வில் அனைவரும் அடிமைகள் பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : மார் 29, 2024 10:50 PM
மதுராந்தகம்:''தி.மு.க.,வில் அனைவரும் அடிமைகள் போல உள்ளனர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து, அவர் பேசியதாவது:
தி.மு.க., கூட்டணி கட்சிகள், ஒரு மாதமாக கூட்டணி பேசின. இறுதி வரை கூட்டணி இழுபறியாக இருந்தது. மனுத்தாக்கல் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெயரை அறிவித்தது.
ஆனால், அ.தி.மு.க., கூட்டணி வலிமையான கூட்டணி. கடந்த 20ம் தேதி கூட்டணி தலைவர்கள் ஒருமித்த கருத்தோடு ஒப்பந்தம் போட்டோம்.
வெற்றி பெறும்
அன்றே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை, முதலில் அ.தி.மு.க., அறிவித்தது. அனைத்திலும், அ.தி.மு.க., கூட்டணி முன்னணி வகிக்கிறது.
மக்கள் நம் பக்கம் இருக்கின்றனர். நாம் மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டசபை தொகுதியிலும், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், வேளாண்மை, தொழிற்சாலை, நெசவுத்தொழில் நிறைந்ததவை. தற்போது மூன்று தொழிலும் நலிவடைந்து உள்ளது.
இம்மூன்று தொழிலும் சிறப்பாக நடக்க, அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். நாம், பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகி விட்டோம்.
ஆனாலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அனைத்து கூட்டங்களிலும், இன்னும் பா.ஜ.,வோடு கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
நாங்கள் கள்ளத்தொடர்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த பழக்கதோஷம் உங்களுக்கு இருப்பதால், இப்படிப்பட்ட வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.
கூட்டணியிலிருந்து வெளியே வந்தது, உங்களுக்கு ஏன் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நாங்கள் வேண்டுமானால் கூட்டணி வைப்போம்; தொண்டர்கள் வேண்டாம் என்றால் விலகுவோம்.
அது, எங்கள் விருப்பம். தி.மு.க.,வினருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால், ஏதோதோ பேசுகின்றனர்.
அடிமைத்தனம்
சாதாரண தொண்டன் எந்த கட்சியிலாவது பொதுச்செயலராக முடியுமா; முதல்வராக முடியுமா? முதல்வருக்கு தில், திராணி இருந்தால், தன் குடும்பத்தை தவிர வேறு ஒருவர் தி.மு.க., தலைவராவார் என்று சொல்லட்டும்.
'எங்கள் கட்சி வெற்றி பெற்றால், கட்சியில் ஒருவரை முதல்வராக்குவேன்' என்று கூறுங்கள் பார்க்கலாம்.
தி.மு.க.,வில் வாரிசு அரசியல் என்றால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை குடும்பமாக பார்ப்பதாக, ஸ்டாலின் கூறுகிறார். அதில், ஒருவரை தி.மு.க., தலைவராக்கினால், முதல்வராக்கினால் ஏற்றுக் கொள்ளலாம்.
தி.மு.க.,விற்கு தன் மகன் தான் வாரிசாக வர வேண்டும் என்று நினைக்கிறார் ஸ்டாலின். அமைச்சர்கள் அடுத்து இன்பநிதி வருவார் என்கின்றனர். என்ன அடிமைத்தனம்.
தி.மு.க.,வில் வேறு ஆள் இல்லையா? தி.மு.க.,வில் அனைவரும் அடிமைகள் போல உள்ளனர். அ.தி.மு.க., சுதந்திரமாக இயங்கும் கட்சி.
நாங்கள் அற்புதமான ஆட்சி கொடுத்தோம். இன்று விளைச்சல் இல்லாததால், அரிசி கிலோ, 15 ரூபாய் உயர்ந்துள்ளது. இது முதல்வருக்கு தெரியுமா?
லட்சணம் தெரியும்
அடித்தட்டு மக்களை சந்தித்து பாருங்கள். உங்கள் ஆட்சியின் லட்சணம் தெரியும். தமிழகம் முழுதும், இந்த ஆட்சி எப்போது போகும் என்ற குரல் ஒலிக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவர்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
சசிகலா காலில் விழுந்த புகைப்படத்தை காட்டி உதயநிதி பிரசாரம் செய்வது குறித்த கேள்விக்கு, ''பெரியவர்களிடம் ஆசி வாங்குவதில் தப்பில்லையே! நான் என்ன மூன்றாவது மனுஷன் காலிலா விழுந்தேன்?'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
பழனிசாமியும் சசிகலாவும் 1954ம் ஆண்டு பிறந்தவர்கள். பெரியவர் என்று பழனிசாமி குறிப்பிட்ட சசிகலா இவரை விட 3 மாதம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

