தயாநிதி அவதுாறு வழக்கில் கோர்ட்டில் பழனிசாமி ஆஜர்
தயாநிதி அவதுாறு வழக்கில் கோர்ட்டில் பழனிசாமி ஆஜர்
ADDED : மே 15, 2024 12:11 AM

சென்னை:தி.மு.க., - எம்.பி., தயாநிதி மாறன் தொடர்ந்த அவதுாறு வழக்கில், நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆஜரானார்.
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டி யிட்ட மத்திய சென்னை தே.மு.தி.க., வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து, சென்னை புரசை வாக்கம் தானா தெருவில், ஏப்ரல், 15ல் பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், 'மத்திய சென்னை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியில், 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படி என்றால், எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்' என்று பேசினார்.
இதையடுத்து, பழனிசாமிக்கு எதிராக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தயாநிதி அவதுாறு வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், பழனிசாமி மே 14ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நேற்று வழக்கு எழும்பூர் 13வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.தர்மபிரபு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பழனிசாமி நேரில் ஆஜரானார். பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் அய்யப்பராஜ், ரியாஸ் அகமது ஆகியோர் ஆஜராகினர்.
இதையடுத்து, வழக்கு ஆவணங்கள் பழனிசாமிக்கு வழங்கப்பட்டன. பின், விசாரணை ஜூன் 27க்கு தள்ளிவைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கை, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
வினோஜ் செல்வம் ஆஜராக உத்தரவு
இதேபோல, தயாநிதி மாறன் தன் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்யவில்லை என, மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி செல்வம், சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் மீதும் தயாநிதி அவதுாறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி எம்.தர்மபிரபு முன் விசாரணைக்கு வந்தது. வினோஜ் பி செல்வம் தரப்பில் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன் ஆஜராகி, அவர் ஆஜராக விலக்களிக்குமாறு மனு தாக்கல் செய்தார். இதற்கு தயாநிதி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜூன் 6ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்த நீதிபதி, அன்றையதினம் வினோஜ் பி செல்வம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

