நமக்கு வாய்த்திருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு நாட்டு நடப்பே தெரியாது: முதல்வர் கிண்டல்
நமக்கு வாய்த்திருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு நாட்டு நடப்பே தெரியாது: முதல்வர் கிண்டல்
ADDED : ஆக 20, 2024 03:52 AM

சென்னை: சென்னை, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர் மகன் திலீபன் திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த ஓராண்டாக, கருணாநிதி நுாற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறோம். அதற்கு மகுடம் வைப்பதுபோல், நாணயம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது, வரலாற்றில் பொறிக்கத்தக்கது. உள்ளத்தில் இருந்த உண்மையை பேசினார். இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் என்றொருவர் தமிழகத்தில் இருக்கிறார். அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில், 'நாணயம் ஹிந்தியில் இருக்கிறது; தமிழில் இல்லை. தமிழ் தமிழ் என்று முழங்குகின்றனரே' என கேட்டிருக்கிறார்.
எதிர்கட்சித் தலைவராக இருப்பவருக்கு முதலில் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். நாட்டின் நடப்பு புரிந்திருக்க வேண்டும். நாணயம் வெளியீடு நிகழ்ச்சி, மத்திய அரசு அனுமதி கொடுத்து, மத்திய அரசின் வழியாக நடக்கக்கூடியது.
ஏற்கனவே பல தலைவர்களுக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது, ஹிந்தியில் எழுதப்பட்டு, அதன்பின் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் அமைந்திருக்கும். இனியாவது அந்த நாணயங்களை எடுத்துப் பாருங்கள்.
அண்ணாதுரைக்கு நாணயம் வெளியிட்டபோது, அவரது தமிழ் கையெழுத்து இடம்பெற வேண்டும் என கருணாநிதி கூறி, அதன்படி இடம் பெற்றது. அதேபோல் கருணாநிதி நாணயத்தில், அவருக்கு மிகவும் பிடித்த, 'தமிழ் வெல்லும்' என்ற சொல், தமிழில் எழுதப்பட்டுள்ளது.
இதை கூட அவர் பார்க்காமல் உள்ளார். இப்படி ஒரு எதிர்க்கட்சி தலைவர் நமக்கு வாய்த்திருக்கிறார் என்பது வருத்தமாக இருக்கிறது. அவர்கள், அம்மா என அழைப்பவர் இறந்து இத்தனை ஆண்டுகளாகிறது. ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்தக்கூட யோக்கியதை அற்றவர்கள், கருணாநிதியின் விழாவை விமர்சனம் செய்யலாமா?
ராஜ்நாத் சிங்கை அழைத்ததால், ஏதோ பா.ஜ.,வோடு உறவு வைக்கப் போகிறோம் என்ற செய்தியை கிளப்பி விட்டுள்ளனர். ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை. எல்லாருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுப்போம். அதற்காக உரிமையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என பேசினார்.

