ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதியில் மாசு அகற்ற திட்டம் வகுக்க உத்தரவு
ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதியில் மாசு அகற்ற திட்டம் வகுக்க உத்தரவு
ADDED : ஏப் 04, 2024 10:22 PM
சென்னை:துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள மாசுவை அகற்ற, விரைந்து திட்டம் வகுக்கும்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
இந்நிலையில், தொழிற்சாலை வளாகத்தில் தேங்கியுள்ள கழிவுகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆலையை இடிக்கக்கோரி, சமூக ஆர்வலரான பாத்திமா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுக்க, தனியார் நிறுவனத்தை நியமிக்க உள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, 'நிபுணத்துவம் பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம், தனியாரை நியமிக்க முடிவெடுத்தது ஏன்' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
பின், ஆலையை சுற்றியுள்ள பகுதியில், எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என்பதை வகைப்படுத்தவும், அவற்றை அகற்றுவதற்கான திட்டத்தை விரைந்து வகுக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
வழக்கில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தையும் எதிர்மனுதாரராக சேர்த்து, விசாரணையை, வரும் 24ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

