ADDED : ஏப் 14, 2024 06:19 AM

சென்னை : புதிய பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான தெளிவற்ற விதிகளை தெளிவுபடுத்த வேண்டும் என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகா ஒத்தக்கால்மண்டபம் கிராமத்தில், புதிய பெட்ரோல் பங்க் அமைக்க, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காததை எதிர்த்து, கோவையை சேர்ந்த அய்யாசாமி என்பவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
நீர்நிலைகளில் இருந்து, 50 மீட்டருக்குள் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது.
மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து, 50 மீட்டருக்கு அப்பால் பெட்ரோல் பங்க் இருக்க வேண்டும் என, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகள் கூறுகின்றன. எந்தவொரு சூழலிலும் மருத்துவமனைகள், குடியிருப்புகளில் இருந்து, 30 மீட்டருக்கும் குறைவான தொலைவில் பெட்ரோல் பங்க் இருக்கக்கூடாது என்றும், வாரிய விதிகளில் உள்ளது.
ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஓடைகள், கால்வாய்கள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து, 50 மீட்டருக்குள் பெட்ரோல் பங்க் இருக்கக்கூடாது என்று வாரியம் கூறுகிறது. புதிய பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான தெளிவற்ற விதிகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் மே 7ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

