
ஏப்ரல் 15, 1990
கரூரில், 1938, ஜூன் 12ல் பிறந்தவர், 'கல்லாப்பெட்டி' சிங்காரம். நாடக நடிகரும், தயாரிப்பாளருமான இவர், சக நடிகர்களுடன், சென்னை, தேனாம்பேட்டையில் அறை ஒன்றில் தங்கி இருந்தார். வித்தியாசமான உடல் மொழியும், குரல் வளமும் உடைய இவரை, அதே இடத்தில் தங்கி, உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி வந்த பாக்யராஜ் கவனித்தார்.
சிங்காரம், ஏற்கனவே, மோட்டார் சுந்தரம் பிள்ளை, காவல்காரன், சொர்க்கம், மறுபிறவி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். எனவே அவரை, சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் தன் அப்பா வேடத்தில் நடிக்க வைத்தார், பாக்யராஜ். திருட்டு முழியும், கரகர குரலும், அஷ்டகோணல் அப்பாவி முகமுமாய் அவர் பேசிய, 'அடேய்... அழகப்பா இது ஆண்டவனுக்கே அடுக்காதுடா' என்ற வசனம் பிரபலமானது.
தொடர்ந்து, இன்று போய் நாளை வா, டார்லிங் டார்லிங் டார்லிங், அந்த ஏழு நாட்கள், ஒரு கை ஓசை உள்ளிட்ட படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார். ரஜினி, கமல், ராமராஜன் உள்ளிட்டோருடன், 100க்கும் மேற்பட்ட படங்களில் கலகலப்பாக நடித்த இவர், தன், 52வது வயதில், 1990ல், இதே நாளில், கிழக்கு வாசல் படப்பிடிப்பின் போது மறைந்தார்.
உடல் மொழியாலும், குரல் மொழியாலும் சிரிக்க வைத்த, கல்லாப்பெட்டி சிங்காரத்தின் நினைவு தினம் இன்று!

