வீட்டு வாயிலில் 'நோ பார்க்கிங்' வக்கீல் மனுவால் கிடைக்கிறது தீர்வு?
வீட்டு வாயிலில் 'நோ பார்க்கிங்' வக்கீல் மனுவால் கிடைக்கிறது தீர்வு?
ADDED : ஆக 11, 2024 01:05 AM

சென்னை: சென்னையில் வீடுகள் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, 'நோ பார்க்கிங் போர்டு'களை அகற்ற, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, போக்குவரத்து போலீசார் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தகுமார் தாக்கல் செய்த மனு:
சென்னையில் தினமும் 8.52 லட்சம் கார்கள் சாலையில் செல்கின்றன; 39 லட்சம் இரு சக்கர வாகனங்களும், 2 லட்சம் போக்குவரத்து வாகனங்களும் செல்கின்றன.
அனுமதி மறுப்பு
வீட்டில் வாகன நிறுத்தம் வசதி இருக்கிறதோ, இல்லையோ, பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கார் உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் இருந்தால், தெருக்களில் நிறுத்தி விடுகின்றனர். சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் பொறுப்பு, போக்குவரத்து போலீசாருக்கு உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், தனி வீடுகளின் உரிமையாளர்கள், பொது இடங்களை தவறாக பயன்படுத்துகின்றனர்.
தங்கள் வீடுகள் முன், 'நோ பார்க்கிங்' போர்டு, பூந்தொட்டிகள், தடுப்புகள் அமைத்து, பொது சாலையில் வாகனங்களை நிறுத்த பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். அடையாறு, தி.நகர், மயிலாப்பூர், மந்தைவெளி, அசோக்நகர் மற்றும் புறநகரில் இவ்வாறு நடக்கிறது.
குடியிருப்புவாசிகள் பொதுச்சாலையை தவறாக பயன்படுத்துவதால், குறுகிய நேரத்துக்கு கூட பொது மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. போக்குவரத்து போலீசாரின் துணையுடன் தான், இப்படி நோ பார்க்கிங் போர்டுகளை குடியிருப்புவாசிகள் வைக்கின்றனர்.
அறிக்கை தாக்கல்
நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என கேட்டு, தகவல் உரிமை சட்டத்தில் மனு அளித்தேன். அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று பதில் அளித்தனர்.
எனவே, சென்னையில் குடியிருப்புவாசிகளால் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகள், பூந்தொட்டிகளை அகற்ற, போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை அகற்ற, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, போக்குவரத்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
இவ்வழக்கு தீர்ப்பின்போது, வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதமோ அல்லது மாற்று ஏற்பாடுகள் குறித்த பரிந்துரையோ போக்குவரத்து போலீசாருக்கு உயர் நீதிமன்றம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

