கடலோர விதிமீறல் கட்டடங்களை தடுக்க புதிய வழிகாட்டி விதிமுறைகள் தயார்
கடலோர விதிமீறல் கட்டடங்களை தடுக்க புதிய வழிகாட்டி விதிமுறைகள் தயார்
ADDED : செப் 12, 2024 11:23 PM
சென்னை:கடலோர பகுதி விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, நிலையான வழிகாட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலோரப் பகுதிகளில் கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்துவதை நெறிப்படுத்த, கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகள் வகுக்கப்பட்டு உள்ளன. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு கட்டுமான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்படும்.
அதிகாரம்
ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கடலோரப் பகுதிகளில் முறையான அனுமதி இன்றி கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் நடவடிக்கை எடுக்க, மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், மாவட்ட, மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய உத்தரவுகள் முறையாக அமலுக்கு வருவதில்லை.
தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்தின் சமீபத்திய கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், 2015 முதல் 2024 வரை, கடலோரப் பகுதி கட்டட விதிமீறல் தொடர்பாக 160 புகார்கள் பெறப்பட்டன. இந்த புகார்கள், மாவட்ட அளவிலான அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டன.
இதுதவிர, தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுகளும், மாவட்ட பொறியாளர்களுக்கு அனுப்பப்பட்டன.
ஆனால், முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கணக்கு தணிக்கை துறை அறிக்கையிலும், இந்த குறைபாடு தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில், பிற மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்தில் கடலோர விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை என்பதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் இல்லை. அதற்காக, நிலையான வழிகாட்டி விதிகள் அடங்கிய வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விதிமீறல் கட்டடங்கள் மீதான புகார்கள், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அனுப்பப்படும். அதே நேரத்தில் அதன் பிரதிகள், நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., உதவி இயக்குனர், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பப்படும்.
நேரடி விசாரணை
மேலும், ஒவ்வொரு புகாரும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் பார்வைக்கும் அனுப்பப்படும்.
விதிமீறல் கட்டட உரிமையாளர்களிடம், மாநில கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளும். இதன் அடிப்படையில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
அத்துடன் இந்த உத்தரவுகள், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வாயிலாக செயல்படுத்தப்படும். மொத்தம், 10 அம்சங்கள் உடைய இந்த வரைவு வழிகாட்டி விதிகள் விரைவில் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

