ADDED : ஏப் 25, 2024 09:06 PM
சென்னை:'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள, மாவட்டங்களில் இருந்து அதிக முன்மொழிவுகள் பெறப்பட்டதால், கூடுதலாக 50 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.
தமிழக அரசு, 2023 - 24ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த, 100 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில், அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தேச ஒதுக்கீடாக 74 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம், திண்டுக்கல், நீலகிரி, சேலம், திருச்சி, தென்காசி, தஞ்சாவூர், ராமநாதபுரம், கோவை, கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டங்களுக்கு, கூடுதல் நிதியாக 24.98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அக்டோபர் மாதம் செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு சேமிப்பு நிதியை கருத்தில் வைத்து, 4.71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும் பல மாவட்டங்களில் இருந்து, நமக்கு நாமே திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள, அதிக அளவில் முன்மொழிவுகள் வரப்பெற்றன.
அப்பணிகளை மேற்கொள்ள, 2023 - 24ம் ஆண்டுக்கு கூடுதலாக அரசு பங்களிப்பு தொகையாக, 100 கோடி ரூபாய் வழங்கும்படி, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அதை பரிசீலனை செய்த அரசு, கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட, 100 கோடி ரூபாயுடன், கூடுதலாக 50 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.

