மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரன்டியும் இல்லை; வாரன்டியும் இல்லை: ஸ்டாலின்
மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரன்டியும் இல்லை; வாரன்டியும் இல்லை: ஸ்டாலின்
ADDED : மார் 27, 2024 11:31 PM

ஸ்ரீவில்லிபுத்துார்:''பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரன்டியும் இல்லை; வாரன்டியும் இல்லை,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
விருதுநகர் தொகுதி காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தென்காசி - தனி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து, ஸ்ரீவில்லிபுத்துார் கிருஷ்ணன்கோவிலில்நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரை அடியொற்றி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
பெண்களுக்கான உரிமை தொகை, இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதி, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், உங்கள் தொகுதியில் முதல்வர், கள ஆய்வில் முதல்வர், நீங்கள் நலமா ஆகிய திட்டங்களை செயல்படுத்திய உரிமையோடு, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்களிடம் ஓட்டு கேட்கிறேன்.
மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ., அரசு, தற்போது புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு உட்பட பல வகைகளில் நம் உரிமையை தடுக்கின்றனர்.
புதிய இந்தியா பிறந்து விட்டது என, மோடி உருவாக்கும் பிம்பம் எப்படி மோசமானது என்பது அம்பலமாகி வருகிறது.
தமிழகத்திற்கும், தமிழருக்கும் துரோகம் செய்வதை. மோடி வழக்கமாக வைத்துள்ளார். ஓட்டு கேட்க மட்டும் தமிழகம் வருகிறார்.
பல்வேறு மாநிலங்களில் சீன பட்டாசு விற்பனையால், சிவகாசியில், 1,000 கோடி ரூபாய் விற்பனை சரிவு ஏற்பட்டது. அதிலும் பட்டாசுக்கு, 28 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது.
பசுமை பட்டாசு தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பட்டாசு தொழிலை மீட்க ஒன்றும் செய்யவில்லை.
தேர்தல் வந்ததால் மக்கள் மீது, மோடிக்கு கரிசனம் வந்துள்ளது. தற்போதுகூட சிலிண்டர், டீசல், பெட்ரோல் விலையை குறைத்துள்ளார். மக்களை நம்ப வைக்க கேரன்டி விளம்பரம் போடுகிறார். மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரன்டியும் இல்லை; வாரன்டியும் இல்லை.
வெறும் கையால் முழம் போடுபவர் மோடி. காற்றில் கம்பு சுத்துபவர் பழனிசாமி. மண்புழு போல் ஊர்ந்து பதவிக்கு வந்து பச்சோந்தியாக மாறி, பா.ஜ., பார்ட்னராக இருந்து தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தவர் அவர். கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக கபட நாடகம் நடத்துகிறார்.
பா.ஜ.,வையோ, மோடியையோ, கவர்ரையோ விமர்சித்ததில்லை. கவர்னரால் எங்களுக்கு பிரச்னை இல்லை என, அறிவுக்கொழுந்து போல் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது.
கவர்னரால் ஸ்டாலினுக்கோ, தி.மு.க.,விற்கோ எந்த பிரச்னையும் கிடையாது. தமிழகத்திற்கு நன்மை செய்வதை தடுக்கிறார். மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவதில் இழுத்தடிப்பது தவறு இல்லையா. முதல்வராக எனக்குள்ள கோபம், எதிர்க்கட்சித் தலைவரான பழனிச்சாமிக்கு வர வேண்டாமா.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த எட்டு தேர்தலிலும் தோல்வியை சந்தித்த நீங்கள், பா.ஜ.,விற்கு அடிமை சேவகம் செய்து, தமிழக உரிமைகளை இழந்தது தான் காரணம்.
தமிழகத்தை வஞ்சிக்கும்பா.ஜ., பாழ்படுத்திய அ.தி.மு.க., இரண்டையும் ஒருசேர வீழ்த்துங்கள்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

