வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை ஒதுக்க 'மகிந்திரா ரிசார்ட்ஸ்'க்கு உத்தரவு
வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை ஒதுக்க 'மகிந்திரா ரிசார்ட்ஸ்'க்கு உத்தரவு
UPDATED : மே 15, 2024 03:54 AM
ADDED : மே 14, 2024 11:23 PM

'மகிந்திரா ரிசார்ட்ஸ் நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 10 ஆண்டுகள் வரை கட்டணமின்றி அறை ஒதுக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், கணபதி நகரை சேர்ந்தவர் ரகுநாதன், 41. இவர், 2022ல் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:
'மகிந்திரா ரிசார்ட்ஸ்' உறுப்பினர் திட்டத்தில் இணைந்தால் ஆண்டுக்கு, ஏழு நாட்கள் இந்தியாவில் உள்ள எந்த ரிசார்ட்சிலும் தங்கி கொள்ளலாம் என, ரிசார்ட்ஸ் நிறுவன பிரதிநிதிகள் என்னை சந்தித்து தெரிவித்தனர்.
அதை நம்பி, 2008ல், 2.13 லட்ச ரூபாய் செலுத்தி, 25 ஆண்டு கால திட்டத்தில் சேர்ந்தேன். ஆனால், நிறுவனம் கூறியபடி எனக்கு அறைகளை ஒதுக்கவில்லை. அதனால், 2034 வரை, ரிசார்ட்ஸ் நிறுவனம் அறைகளை ஒதுக்கி தர வேண்டும். நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்காக, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
விரைவான விசாரணைக்காக, கடந்த பிப்ரவரியில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துக்கு, இந்த வழக்கு மாற்றப்பட்டது.
நிறுவனம் சார்பில், 'விடுமுறை கால ரிசார்ட்ஸ் திட்டத்தின் கீழ், உறுப்பினராக சேருபவர்கள், ஒவ்வொரு ஆண்டும், திட்டத்திற்கு ஏற்ப ஆண்டு சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.
'எங்களிடம் உறுப்பினராக சேர்ந்த ரகுநாதன், தற்போது வரை ஒரு ஆண்டு கூட சந்தா கட்டணம் செலுத்தவில்லை. நிபந்தனைகளை பின்பற்றாமல் ரகுநாதன் தாக்கல் செய்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, வாதிட்டனர்.
விசாரணை முடிந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
ரிசார்ட்களில் தங்குவதற்கான வசதி வழங்குவது உள்ளிட்ட எந்த ஒரு சேவை திட்டங்களிலும், நுகர்வோர் உறுப்பினராக சேரும் போது நிபந்தனைகளை படித்து பார்த்து சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இந்த வழக்கை தாக்கல் செய்தவர், 1.13 லட்ச ரூபாய் சேர்க்கை கட்டணம் செலுத்தி இருந்தாலும், விதிமுறைப்படி ஆண்டு சந்தாவை செலுத்தவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் விடுதிகளில் தங்கினாலும், தங்காவிட்டாலும், ஆண்டு சந்தாவை செலுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், வழக்கு தாக்கல் செய்தவர் அறை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என கேட்க முடியாது.
ஆனால், வழக்கு தாக்கல் செய்தவர், நிறுவனத்திடம், 'ஒயிட் சீசன்' என்ற திட்டத்தில் சேர்ந்துள்ளார். ஆனால், தன்னிச்சையாக அவரை, 'ப்ளூ சீசன்' என்ற திட்டத்திற்கு நிறுவனம் மாற்றி உள்ளது.
வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் அவர் சேர்ந்த திட்டத்தில் இருந்து, மற்றொரு திட்டத்திற்கு உறுப்பினராக மாற்றியது நிறுவனத்தின் சேவை குறைபாடு.
அதனால், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, வரும், 2034 வரை நிறுவன ரிசார்ட்களில், ஒவ்வொரு ஆண்டும், ஏழு நாட்களுக்கு கட்டணம் இல்லாமல் தங்குமிட வசதி வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டது.
- -- நமது நிருபர் -

