பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்த சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூடல்?
பத்திரப்பதிவு எண்ணிக்கை குறைந்த சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூடல்?
ADDED : ஏப் 26, 2024 02:18 AM

சென்னை: பத்திரப்பதிவு குறைவாக உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களை மூடுவதற்கான பணிகளை, பதிவுத்துறை துவக்கியுள்ளது.
தமிழகத்தில், 56 பதிவு மாவட்டங்களில், 582 சார் - பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இதில், சார் - பதிவாளர் அலுவலக வாரியாக பத்திரங்களின் எண்ணிக்கை, வருவாய் குறித்து, பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது.
பெரும்பாலான அலுவலகங்களில் ஆண்டுக்கு, 2,000த்துக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன. சில பகுதிகளில் ஆண்டுக்கு, 200 முதல் 500 பத்திரங்கள் தான் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த அலுவலகங்களால், ஆண்டு வருவாய் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக, குறைந்த எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களை மூடுவது குறித்து, பதிவுத்துறை ஆராய்ந்து வருகிறது.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மிக குறைந்த எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்கள் தொடர்ந்து செயல்படுவது, பல்வேறு நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
அந்த அலுவலகங்களை, அருகில் உள்ள வேறு சார் -பதிவாளர் அலுவலகத்துடன் இணைக்க வேண்டியது அவசியம்.
மிக குறைந்த அளவில் பத்திரங்கள் பதிவாகும் சார் பதிவாளர் அலுவலக எல்லையில் உள்ள கிராமங்களை, அருகில் உள்ள வேறு அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.
இதே போன்று, அதிக பத்திரங்கள் பதிவாகும் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட சில கிராமங்களை பிரித்து, வேறு அலுவலகத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்காக, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகமும் எப்போது துவங்கப்பட்டது, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் பதிவான பத்திரங்களின் எண்ணிக்கை விபரங்களை பட்டியலாக தயாரித்து, வரும் 29க்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

