இன்று முதல் 3 நாட்களுக்கு 'டாஸ்மாக்' கடைக்கு 'லீவு'
இன்று முதல் 3 நாட்களுக்கு 'டாஸ்மாக்' கடைக்கு 'லீவு'
ADDED : ஏப் 16, 2024 08:42 PM
சென்னை:லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும், 19ம் தேதி நடக்கிறது. அரசியல் கட்சியினர், கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
இதனால், இன்று முதல் வரும், 19ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவித்து, டாஸ்மாக் நிறுவனம், கடந்த, 8ம் தேதி உத்தரவிட்டது.
மூன்று நாட்களும் மதுக்கடைகளை ஒட்டிய மதுக்கூடங்கள், கிளப், நட்சத்திர ஹோட்டல்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மதுபானங்களை வாங்கி இருப்பு வைக்க, நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன், 'குடி'மன்கள் குவியத் துவங்கினர். அவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மதியம், 12:00 மணிக்கு மதுக்கடைகள் திறந்தும், முண்டியடித்து மதுபான வகைகளை வாங்கினர்.
இதனால், அனைத்து மதுக்கடைகளிலும், மதியம் முதல் இரவு கடைகள் மூடப்படும் வரை, 'குடி'மகன்கள் கூட்டம் அலைமோதியது. மது விற்பனை, 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.

