ADDED : ஜூலை 29, 2024 03:54 AM
சென்னை: வணிகர்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும் கணக்கெடுப்பு பணியை, வணிக வரித்துறை துவக்கி உள்ளது.
ஒவ்வொரு வணிக நிறுவனமாக, கடையாக, வணிக வரித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். எந்தெந்த வணிகர்கள் ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்று வணிகம் செய்கின்றனர்; யாரெல்லாம் பதிவு பெறாமல் வணிகம் செய்கின்றனர் என்ற விபரம் சேகரிக்கப்பட உள்ளது.
கிளை, கிடங்கு போன்ற கூடுதல் வணிக இடம் இருந்தால், உரிய விபரங்கள் பதிவு சான்றிதழில் பதிவிடப்பட்டுள்ளதா; ஜி.எஸ்.டி., பதிவு எண், தெளிவாக நிறுவன பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளதா; நிறுவனத்தில் பெயர் தமிழில் எழுதப்பட்டுள்ளதா என்ற விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
பதிவு பெறாமல் வியாபாரம் செய்வோரை கண்டறிந்து, அரசு வருவாய் இழப்பை தடுக்க, இப்பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, ஒரு படிவத்தில் விபரங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் கையெழுத்து பெறுகின்றனர்.
இதற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

