ADDED : ஏப் 15, 2024 03:01 AM

சென்னை: சொத்து விற்பனையின் போது, வழிகாட்டி மதிப்பை குறிப்பிடாவிட்டால், அந்த பத்திரம் தனித்துறை கலெக்டர் விசாரணைக்கு அனுப்பப்படும்.
அந்தந்த மாவட்ட அளவிலேயே, இதற்கான தனி துணை கலெக்டர்கள் தலைமையிலான குழு, இதை விசாரித்து, புதிய மதிப்பை நிர்ணயிக்கும். இந்த புதிய மதிப்பு அதிகமாக உள்ளது என, மனுதாரர் நினைக்கலாம்.
அதேபோல், இந்த மதிப்பால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என சார் - பதிவாளர், மாவட்ட பதிவாளர் தரப்பு நினைக்கலாம். இது போன்ற நிகழ்வுகளில், பதிவு சட்டப்படி, ஐ.ஜி.,யிடம் மேல் முறையீடு செய்யலாம்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை, இதுவரை சென்னை சாந்தோமில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் தான் நடந்து வந்தன.
இந்நிலையில், முதல் முறையாக, மண்டல அலுவலகங்களில், இந்த விசாரணையை முடிக்க, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முடிவு செய்துஉள்ளார்.
இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில மதிப்பு நிர்ணயிப்பதில் ஏற்படும் பிரச்னைகளில், மேல்முறையீடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த மனுக்கள் தொடர்பாக விசாரணை சென்னையில் நடப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் சென்னைக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதில், பொதுமக்களுக்கு ஏற்படும் நடைமுறை சிரமங்களை குறைக்கும் வகையில், மண்டல அளவில் விசாரணை நடத்த முயற்சி செய்கிறோம். இதில் கிடைக்கும் அனுபவங்கள் அடிப்படையில், பிற மண்டலங்களில் இந்த விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

