ADDED : ஏப் 04, 2024 11:38 PM
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென் மாநில பகுதிகளின் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்று பகல் வரையிலான காலத்தில், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
இன்று பிற்பகல் முதல் வரும் 7ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி முழுதும் வறண்ட வானிலை நிலவும்; மழைக்கு வாய்ப்பில்லை. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும்.
வட மாவட்டங்களில் 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். சென்னையில் 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில், 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. சேலம் மற்றும் ஈரோட்டில் 41 டிகிரி செல்ஷியஸ், அதாவது 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், 38; மதுரை, திருத்தணி, 39; தர்மபுரி, கரூர் பரமத்தி, நாமக்கல், திருப்பத்துார், திருச்சி, வேலுார், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

