அணை கட்ட அனுமதி இருக்கா?: கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி கேள்வி
அணை கட்ட அனுமதி இருக்கா?: கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி கேள்வி
UPDATED : மே 21, 2024 05:08 PM
ADDED : மே 21, 2024 12:22 PM

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல்துறை மற்றும் தேசிய வன விலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.
கேரளா இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகா, வட்டவடா பஞ்சாயத்து, பெருகுடா பகுதியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே, மலைச்சரிவில் அமராவதி அணையின் நீர்வரத்தை தடுக்கும் வகையில், கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. சிலந்தி நீர் வீழ்ச்சிக்கு அருகே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால், கம்பக்கல் மலைச்சரிவிலிருந்து, மஞ்சம்பட்டி வழியாக, தேனாறுக்கு வரும் நீர் தடுக்கப்படுகிறது. இதனால், அமராவதி பாசன பகுதிகள் பாதிக்கும்.
எனவே, தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி, அமராவதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.அமராவதி பாசன கோட்ட அதிகாரிகள் குழு, கேரள அரசு அணை கட்டும் பகுதியை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
அனுமதி இருக்கா?
இந்நிலையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தை தாமாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்துள்ளது. சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது குறித்து சுற்றுச் சூழல் துறை, தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதி பெறப்பட்டதா என்று பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
உரிய அனுமதி பெறவில்லை என்றால் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை கேளர அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். கேரள அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

