தேர்தலை புறக்கணிக்கும் ஓய்வூதியர் துறை செயலருக்கு அறிவுறுத்தல்
தேர்தலை புறக்கணிக்கும் ஓய்வூதியர் துறை செயலருக்கு அறிவுறுத்தல்
ADDED : ஏப் 07, 2024 12:57 AM
சென்னை:போக்குவரத்து ஓய்வூதியர்களின் தேர்தல் புறக்கணிப்பு விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, துறை செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, 92,000 பேர் இருக்கின்றனர். இந்த ஓய்வூதியர்களுக்கு, 2015 நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அகவிலைப்படி உயர்வை வழங்க, நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பிறகும் வழங்காமல், அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு, காப்பீடு வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றாததால், போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் உள்ள கலெக்டர் அலுவலங்களில் வாக்காளர் அடையாள நகலுடன் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீது, தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறை செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

