திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க அறிவுறுத்தல்
திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2024 12:19 AM
சென்னை: அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் ஸ்டேஷினில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பெலிக்ஸ்ராஜ். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ளார்.
இவரது தந்தை விபத்தில் காயமடைந்ததால், சிகிச்சைக்கு செலவான ரூ.6.54 லட்சத்தை, காப்பீட்டு திட்டத்தில் தரும்படி கோரினார். நிதித்துறை பிறப்பித்த அரசாணையின்படி, குடும்பம் என்ற வரையறைக்குள் தந்தை வரவில்லை எனக்கூறி, பெலிக்ஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்தும், திருமணமான ஊழியரின் பெற்றோரை விலக்கி வைக்கும் பிரிவை ரத்து செய்ய வேண்டி பெலிக்ஸ்ராஜ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சுதீர் குமார்பிறப்பித்த உத்தரவு:
இதேபோன்ற ஒரு வழக்கில்,தந்தைக்கான மருத்துவ செலவை வழங்க கோரியதை, உயர் நீதிமன்றம் ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வழக்கில், தனி நீதிபதி கூறிய காரணங்களை, இந்த நீதிமன்றம் முழுமையாக ஏற்கிறது.
எனவே, மனுதாரரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. மனுதாரரை சார்ந்து அவரது தந்தை இருந்தால், அவருக்கான சிகிச்சை செலவை, எட்டு வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும்.
அரசு ஊழியருக்கு திருமணமாகி விட்டால், பெற்றோரை குடும்பம் என்ற வரையறைக்குள் இருந்து நீக்குவது சட்டவிரோத மானது.
எனவே, இந்த விஷயத்தில், அரசின் தலைமை செயலர் தனிக்கவனம் செலுத்தி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஊழியர்களின் பெற்றோரையும் சேர்க்கும் வகையில், திட்டத்தில் உரிய மாற்றங்களை மூன்று மாதங்களுக்குள் ஏற்படுத்த உத்தரவிட்டார்.
இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.

