'ராஜிவ் குடும்ப சொத்துக்காக நீக்கப்பட்டது தான் பரம்பரை வரி!'
'ராஜிவ் குடும்ப சொத்துக்காக நீக்கப்பட்டது தான் பரம்பரை வரி!'
ADDED : ஏப் 30, 2024 05:47 AM
சென்னை : ''ராகுல் கூறும், 'பரம்பரை வரி' என்பது, முன்னர் நாட்டில், 'எஸ்டேட் வரி' என்ற பெயரில் இருந்தது. அதை ராஜிவ் குடும்பத்திற்காக, அவரது தலைமையிலான அரசு நீக்கியது. தமிழக மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்,'' என, ஆடிட்டர் சேகர் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வசதியானவர்களின் சொத்தை எடுத்து பிரித்து கொடுப்போம் என்று கூறுகின்றனர்.
அண்ணன் பணக்காரன்; தம்பி ஏழை. அண்ணன் சொத்தை எடுத்து தம்பிக்கு பிரித்து கொடுக்க சட்டம் உள்ளதா, சட்டம் கொண்டு வர முடியுமா என்பதை, மக்கள் நடைமுறையில் சிந்திக்க வேண்டும்.
'எஸ்டேட்' வரி
காங்கிரஸ் தற்போது, வாய்ஜாலத்தில் மக்கள் ஏமாந்து விட மாட்டார்களா என்று பார்க்கிறது. இந்தியாவில், 98 கோடி மக்கள் ஓட்டு போடுகின்றனர். இவர்களில், 80 கோடி மக்கள், தலைவர்கள் கூறுவதை வேதவாக்காக நினைத்து நம்புகின்றனர்.
உண்மை அதுவல்ல. சொத்தை மறுபகிர்வு செய்ய வாய்ப்பு கிடையாது. அப்படி செய்வதாக இருந்தால், 55 ஆண்டுகள் காங்., ஆட்சி செய்த போது செய்திருக்கலாம்; அதை செய்யவில்லை.
அடுத்து தேர்தல் அறிக்கையில், பரம்பரை வரி கொண்டு வரப்போவதாக கூறியுள்ளனர். ஏற்கனவே இந்த வரி இருந்தது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.
நம் நாட்டில், 30 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை வரி அமலில் இருந்தது. அதுதொடர்பான சட்டம், 1985 பிப்., 28ம் தேதி வரை இருந்தது. அதற்கு பெயர், 'எஸ்டேட்' வரி.
அதாவது, ஒருவர் இறந்து விட்டால், அவரது சொத்து 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த சொத்துக்கான வரி, 5 முதல் 30 சதவீதம் வரை இருந்தது. அந்த வரி செலுத்திய பின்தான், அந்த சொத்து அவரது வம்சாவளியினருக்கு செல்லும்.
கடந்த, 1956 முதல் 1985 வரை இந்த சட்டம் இருந்தது. இந்திரா 1984ல் இறந்தார். அடுத்த ஆண்டு மத்தியில் ராஜிவ் ஆட்சி வந்தது.
வி.பி.சிங் நிதி அமைச்சராக இருந்தார். ராஜிவின் ஆட்சியில், முதல் ஆண்டு 1985 பிப்., 28ல் இந்த சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
மறதி அதிகம்
மேலும், அந்த சட்டத்தை, 1984 அக்., 1 முதல் அமலுக்கு கொண்டு வருவதாக அறிவித்தனர். அன்று முதல் இறந்தவர்கள் குடும்பத்தினர், அந்த வரி செலுத்த வேண்டியதில்லை.
அம்பானிக்காக, அதானிக்காக சட்டம் கொண்டு வந்ததாகக் கூறுகின்றனர். இவர்கள் சட்டம் கொண்டு வந்தது அவர்கள் குடும்பத்துக்காக.
ஏனெனில், இந்திரா 1984 அக்., 31ல் படுகொலை செய்யப்பட்டார். அவர் வழியே வந்த சொத்துக்களுக்கு, பரம்பரை வரி செலுத்த ராஜிவ் விரும்பவில்லை.
அந்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான், சொத்துக்களை எடுத்து வினியோகிக்கப் போகிறேன் என்கிறார். தமிழக மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து அறக்கட்டளைக்கு, 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்க, வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தனர். மக்களுக்கு மறதி அதிகம். காங்கிரசில் உள்ளவர்கள் கூறுவது முழுதும் பொய்.
இவ்வாறு அவர் கூறினார்.

