மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களை தொழிற்சாலைகள் பின்பற்ற உத்தரவு
மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களை தொழிற்சாலைகள் பின்பற்ற உத்தரவு
ADDED : ஏப் 10, 2024 09:52 PM
சென்னை:மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை, தொழிற்சாலைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை, கோழி தீவனம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
கடந்த நவம்பரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், 'சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாமல், துர்நாற்றத்தை ஏற்படுத்தும் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி, தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொழிற்சாலை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
துர்நாற்றம் வீசுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை தொழிற்சாலைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
தற்போதைய நிலையில், கால்நடை, கோழி தீவன தொழிற்சாலையை இயக்க அனுமதிக்கலாம். மூன்று மாதங்கள் அதன் செயல்பாடுகளை மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உன்னிப்பாக கண்காணித்து, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

