ஆரோவில்லில் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் மக்களை திரட்டி போராட்டம் எம்.எல்.ஏ., சக்ரபாணி எச்சரிக்கை
ஆரோவில்லில் அதிகார துஷ்பிரயோகம் செய்தால் மக்களை திரட்டி போராட்டம் எம்.எல்.ஏ., சக்ரபாணி எச்சரிக்கை
ADDED : ஏப் 04, 2024 12:34 AM

வானுார் : ''ஆரோவில் நிர்வாகம் அதிகார துஷ்பிரயோகம் செய்தால், பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்'' என எம்.எல்.ஏ., சக்ரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து எம்.எல்.ஏ., சக்ரபாணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், ராமதாஸ். உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சென்று, ஆரோவில் பவுண்டேஷன் செயலரின் அலுவலகத்தில் அளித்துள்ள மனு;
சர்வதேச நகரமான ஆரோவில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதகுல ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தரமான கல்வி, இயற்கை விவசாயம், நிலத்தடி நீர் செறிவூட்டல் மாதிரிகள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ஆரோவில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் வருகிறது. குறிப்பாக, விவசாயிகளிடம் பெறப்படும் நிலங்களுக்கு பதிலாக மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் அரசியல் தலையீடு உள்ளதாகவும், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு உடந்தையாக ஆரோவில் நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பலரின் உழைப்பில் வளர்ந்த ஆரோவில், புதிதாக வந்த ஒரு சிலரின் சுயநலத்திற்காக அழிவதை பொறுத்துக்கொள்ள முடியாது. அனைத்தையும் சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு ஆரோவில் வர வேண்டும். ஆரோவில் வளர்ச்சிக்கு தேவையான முழு ஒத்துழைப்பை, தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையிலும், ஆரோவில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர் என்ற முறையிலும் வழங்கத் தயார்.
மீண்டும் இதுபோன்ற முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம், உள்ளூர் ஆரோவில் வாசிகளுக்கு தொந்தரவு அளிப்பது மற்றும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகள், விசா மறுப்பு தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டங்கள் நடத்த நேரிடும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

