10 ஆண்டுகள் சும்மா இருந்து விட்டு இப்போது அறிக்கை விடுவதா? * பழனிசாமிக்கு முத்துசாமி பதிலடி
10 ஆண்டுகள் சும்மா இருந்து விட்டு இப்போது அறிக்கை விடுவதா? * பழனிசாமிக்கு முத்துசாமி பதிலடி
ADDED : ஜூலை 24, 2024 10:19 PM
சென்னை:'டாஸ்மாக் கடைகளிலோ, பார்களிலோ தவறு நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் முறைகேடு நடப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி அறிக்கை விட்டிருந்தார். அதற்கு பதில் அளித்து, அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, டாஸ்மாக் நிறுவனம் சார்பில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், நீலகிரி மாவட்டத்தில், 2022 மே 15ல் அமல்படுத்தப்பட்டது. ஜூன் மாதத்தில், மற்ற மலை சார்ந்த பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. இதுவரை ஒன்பது மாவட்டங்களில் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்த, மண்டல வாரியாக டெண்டர் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், காலி பாட்டில்களை மதுபான ஆலைகள் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.
இதன் காரணமாக டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. மதுபான உற்பத்தியாளர்கள், காலி பாட்டில்களை திரும்பப் பெறுவவதற்கு இசைவு தெரிவிக்க, கால அவகாசம் கேட்டுள்ளனர். இத்திட்டம் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலுடன், வரும் அக்டோபர் மாதத்திற்குள், அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக செயல்படுத்தப்படும்.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், பழனிசாமி இதை சிந்திக்கவில்லை. இப்போது குறை கூறும் அவர், தன் ஆட்சி காலத்திலேயே நடைமுறைப்படுத்தி இருக்கலாமே. அ.தி.மு.க., ஆட்சியில் அரசுக்கு வர வேண்டிய வருவாய் என்ன ஆனது என்று கேட்க வேண்டி உள்ளது.
மேலும், கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதாக கூறி வருகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து தொடரும் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதத்திற்குள் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும், 'பில்லிங்' இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விற்பனை விலையை காட்டிலும் கூடுதலாக விற்போர் மீது, பணியிடை நீக்கம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளிலோ, பார்களிலோ தவறு நடந்தால், தொடர்ச்சியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில இடங்களில், வெளியில் விற்பனை செய்வோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்கின்றனர்.
தற்போது பார்களுக்கு ஆன்லைன் வழியே, டெண்டர் விடப்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் முடிவெடுக்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் ஆன்லைன் டெண்டர் முறை இருந்ததா என்பதை பழனிசாமி சொல்ல வேண்டும்.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது குறித்து, 10 ஆண்டுகள் கவலைப்படாமல் இருந்து விட்டு, தற்போது பழனிசாமி அறிக்கை விடுவது ஏற்புடையதல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***

