ஒரே விஷயத்துக்கு எத்தனை மனு? ரூ.1 லட்சம் டிபாசிட் செய்ய உத்தரவு!
ஒரே விஷயத்துக்கு எத்தனை மனு? ரூ.1 லட்சம் டிபாசிட் செய்ய உத்தரவு!
ADDED : ஏப் 05, 2024 09:48 PM
சென்னை:கடலுார் மாவட்டம் வடலுாரில், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தவர், தன் நேர்மையை நிரூபிக்க, 1 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடலுாரில், சத்திய ஞானசபை முன் உள்ள பெருவெளி பகுதியில், 100 கோடி ரூபாய் செலவில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஒப்புதல் அளித்து, கடந்த ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்வேங்கை என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இதே விஷயம் தொடர்பாக, ஏற்கனவே ஒரு வழக்கு விசாரணைக்கு வந்து, உத்தரவு பிறப்பித்ததை முதல் பெஞ்ச் சுட்டிக்காட்டியது. 'ஒரே விஷயத்துக்காக எத்தனை வழக்கு தாக்கல் செய்வீர்கள்; விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதா' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புவதாகவும், தன் நேர்மையை நிரூபிக்க மனுதாரர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுதாரர் தன் நேர்மையை நிரூபிக்க, இரண்டு வாரங்களில் 1 லட்சம் ரூபாயை டிபாசிட் செய்யும்படி உத்தரவிட்ட முதல் பெஞ்ச், டிபாசிட் செய்யும்பட்சத்தில், வழக்கை வரும் 24ம் தேதிக்கு பட்டியிலிட அறிவுறுத்தியது.

