அதிமுக ஆட்சியில் அதிக கடன்: தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு
அதிமுக ஆட்சியில் அதிக கடன்: தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு
ADDED : ஏப் 07, 2024 05:51 PM

சேலம்: அதிமுக ஆட்சியில் அதிக கடன் வைத்து விட்டு சென்றனர் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசுகையில் குறிப்பிட்டார்.
சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து, உதயநிதி தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: அனைவரும் சமம் என கூறுவதே திராவிட மாடல் அரசு. நீட் தேர்வு இல்லை என்று தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னார். 31 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி வென்றால் ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும். இ.பி.எஸ்., மூலம் தான் தமிழகத்திற்குள் நீட் தேர்வை மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை.
அதிக கடன்
ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை வெற்றி பெற செய்ய வேண்டும். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நான் மட்டும் தான் ஆறுதல் கூறினேன். அதிமுக ஆட்சியில் அதிக கடன் வைத்து விட்டு சென்றனர். அதிமுக அதிக கடன் வைத்துச் சென்றாலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. திமுக, காங்கிரஸ் தான் நீட் தேர்வு கொண்டு வர காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

