ADDED : ஜூலை 12, 2024 11:42 PM
சென்னை:'நான்கு மாவட்டங்களில் இன்றும், ஐந்து மாவட்டங்களில் நாளை மறுதினமும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அம்மையம் வெளியிட்ட அறிவிப்பு:
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். நாளை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
நாளை மறுதினம், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், மாலை மற்றும் இரவு வேளைகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.
மன்னார் வளைகுடா, அதையொட்டிய தமிழக தெற்கு கடலோரப் பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, மீனவர்கள் நாளை மறுதினம் வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. பாளையங்கோட்டை, ஈரோடு, மதுரை மற்றும் வேலுாரில், 39 டிகிரி செல்ஷியஸ் என, ஐந்து இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
சென்னை, கடலுார், காரைக்கால், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருச்சி, திருத்தணியில், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

