உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 11 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
UPDATED : மே 22, 2024 09:07 AM
ADDED : மே 22, 2024 06:12 AM

சென்னை : தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் இன்று (மே 22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் இன்றும், நாளையும் 11 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில், வளி மண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அதனால், இன்று அந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதியில், வரும் 24ம் தேதி காலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. அதன்பின், மேலும் வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் நகரும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று மிக கன மழை பெய்யும்.
துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, மிக கன மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நாளை கன மழை பெய்யும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், நாளை மறுநாள் கன மழை பெய்யும். சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநில அளவில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில், 16 செ.மீ., மழை பெய்துள்ளது.
கல்லணை, 14; கரூர், திருச்சி 13; சின்னக்கல்லார், சமயபுரம் 12; சேந்தமங்கலம், நாமக்கல் 11; ராசிபுரம், விராலிமலை, பஞ்சப்பட்டி, தொண்டி 10; சிவகங்கை, ஏற்காடு, சென்னிமலை 9; ஒகேனக்கல், திருச்சி, வால்பாறை, சேலம் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள், நாளைக்குள் கரைக்கு திரும்ப எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் மே மாதம் முடிய உள்ள கோடை காலத்தில், தமிழகத்திற்கு, 12.5 செ.மீ., மழை இயல்பாக கிடைக்கும். இந்த ஆண்டு மார்ச் 1 முதல் நேற்று முன்தினம் வரை 9.63 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
இது, இயல்பை விட, 7 சதவீதம் குறைவு. நேற்று காலை 8:30 மணி வரை, தமிழகத் தில் 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு இருந்தது.
கனமழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில், கடலுாரில் மின்னல் தாக்கி ஒருவர், கன்னியாகுமரியில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் இறந்துள்ளனர்; 12 கால்நடைகள் இறந்துள்ளன. 24 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த ஐந்து நாட்களில், 11 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
தமிழக கடற்கரை, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில், 40 முதல் 65 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள், நாளைக்குள் கரைக்கு திரும்ப எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கை குறித்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள, 4.05 கோடி மொபைல் போன்களுக்கு, எச்சரிக்கை எஸ்.எம்.எஸ்.,கள் கடந்த மூன்று நாட்களில் அனுப்பப்பட்டுள்ளதாக, வருவாய் துறை தெரிவித்துள்ளது.

