திண்டுக்கல், தேனி உள்பட 5 மாவட்டங்களில் ஜூன் 22ல் கனமழை
திண்டுக்கல், தேனி உள்பட 5 மாவட்டங்களில் ஜூன் 22ல் கனமழை
ADDED : ஜூன் 19, 2024 02:30 AM
சென்னை:திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஜூன் 22ல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்மாநில பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 21 வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 22ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த, ஐந்து நாட்களுக்கு இயல்பை ஒட்டியே வெப்ப நிலை பதிவாகும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, அதையொட்டிய தமிழக கடலோர பகுதிகள், தெற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு, 35 முதல் 45, கி.மீ., வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

