ஊரில் ஓணான் பிடிக்க முடியாதவன், காட்டில் சிங்கம் மேய்க்க ஆசைப்படுகிறான்!
ஊரில் ஓணான் பிடிக்க முடியாதவன், காட்டில் சிங்கம் மேய்க்க ஆசைப்படுகிறான்!
UPDATED : ஏப் 11, 2024 07:32 AM
ADDED : ஏப் 11, 2024 12:15 AM

பொள்ளாச்சி: ''இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என முதல்வர் விளம்பரம் கொடுக்கிறார்; இதை பார்க்கும் போது, 'ஊரில் ஓணான் பிடிக்க முடியாதவன், காட்டில் சிங்கம் மேய்க்க ஆசைப்படுகிறான்' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்த, அ.தி.மு.க., பிரசார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க., இரண்டாக, மூன்றாக உடைந்து விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியை உடைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், கட்சி நிர்வாகிகள் ஆதரவோடு, அத்தனை முயற்சிகளும் தகர்க்கப்பட்டன.
அ.தி.மு.க.,வை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., அதை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா; இரு தலைவர்களும், தமிழக மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடையாகும். இவர்கள், மக்களுக்காக வாழ்ந்தவர்கள்; சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தனர்.
பா.ஜ., மீது தாக்கு
பா.ஜ.,வில் புதிதாக வந்த தலைவருக்கு, தினமும் பேட்டி கொடுப்பது தான் வேலை. பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்க பார்க்கிறார். ஆனால், தமிழக மக்களிடம், இது எடுபடாது.
மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்; அதனால், எந்த பயனும் இல்லை. விமானத்தில் வந்து, நேராக ரோட்டில் நடந்து போனால், மக்கள் ஓட்டு போடுவாங்களா?
தமிழக மக்கள் அறிவு, திறமை படைத்தவர்கள். சரி, தவறு என உணர்ந்து தீர்ப்பு அளிப்பர்; ஏமாற்று வேலை எடுபடாது. யார், யாரோ, ஏதேதோ பேசி குழப்பி, அரசியல் ஆதாயம் பெற நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது.
இரு மாநில பிரச்னை
பா.ஜ., மாநில தலைவர், பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவேன் எனக் கூறுகிறார்.
இது, இரு மாநிலத்துக்கு இடையே பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம். அதில், அவர் என்ன செய்ய முடியும்? அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, கேரள முதல்வருடன் பேச்சு நடத்தி இருமாநில அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அதன்பின், ஆட்சிக்கு வந்த தி.மு.க., இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை. இத்திட்டம் செயல்படுத்த போராடியது அ.தி.மு.க., அரசு. தமிழகம், கேரளாவில் பா.ஜ., வர வாய்ப்பு இல்லை. இப்படி இருக்கும் போது, பா.ஜ., தலைவர் எப்படி வாக்குறுதி கொடுக்க முடியும்.
தகுதியை மறந்தவர்
அ.தி.மு.க., 10 ஆண்டு ஆட்சியில் என்ன திட்டங்கள் செய்துள்ளது எனக் கூறுகிறோம்; தி.மு.க., ஆட்சியில் என்ன செய்துள்ளீர்கள் என சொல்லுங்கள் என கேட்டும் பதில் இல்லை.
பிரசார கூட்டத்தில் என்னை அவதுாறாக, இழிவாக பேசுவது தான் ஸ்டாலின் பரப்புரையாக உள்ளது. தி.மு.க., அரசின் திட்டங்களை பட்டியலிட முடியாததால், என்னை பற்றி பேசுகின்றனர். ஆனால், தகுதியை மறந்து ஸ்டாலின் இழி சொல் பேசுகிறார். இவ்வாறு பேசினால் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
ஸ்டாலினுக்கு பழமொழி
'இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்' என முதல்வர் விளம்பரம் கொடுக்கிறார்; இதை பார்க்கும் போது, 'ஊரில் ஓணான் பிடிக்க முடியாதவன், காட்டில் சிங்கம் மேய்க்க ஆசைப்படுகிறான்' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
தமிழகத்தை குட்டிச்சுவராக்கியது தான் மிச்சம்; மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்ட ஸ்டாலின், 'இண்டியா' கூட்டணி என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்.
தி.மு.க.,வையும் ஊழலையும் பிரித்து பார்க்க முடியாது. இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் விற்பனை என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதனால், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு, பேசினார்.

