sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'குண்டாஸ்' கைதுகளை தவிர்க்க வழிகாட்டுதல்கள் உள்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

/

'குண்டாஸ்' கைதுகளை தவிர்க்க வழிகாட்டுதல்கள் உள்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

'குண்டாஸ்' கைதுகளை தவிர்க்க வழிகாட்டுதல்கள் உள்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு

'குண்டாஸ்' கைதுகளை தவிர்க்க வழிகாட்டுதல்கள் உள்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஏப் 20, 2024 07:30 PM

Google News

ADDED : ஏப் 20, 2024 07:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:'குண்டர் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, உள்துறை செயலர் பரிசீலித்து சுற்றறிக்கை வெளியிட நீதிமன்றம் எதிர்பார்க்கிறது' என உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, பாலியல் வன்கொடுமை வழக்கில் திருக்குறளை சுட்டிக்காட்டி ஜாமின் அனுமதித்தது.

ஆண் வழக்கறிஞர் ஒருவருக்கும், கல்வி நிறுவன நிர்வாகியான ஒரு பெண்ணுக்கும் இடையே, 'பேஸ்புக்' வழியே நட்பு ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்ததாக அப்பெண் போலீசில் புகார் செய்தார்.

வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். அவர் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு: இருவர் இடையே நடந்த உரையாடலுக்கான ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவர் இடையே திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருந்தது. மனுதாரரை ஓர் ஆண் விபசாரியாக புகார்தாரர் பயன்படுத்தியுள்ளார்.

புகார்தாரர் தரப்பு: புகார்தாரர் ஒரு தனியார் கல்லுாரி நிர்வாக இயக்குனர். மனுதாரர் மத்திய அரசின் வழக்கறிஞர் எனக்கூறி போலி அடையாள அட்டையை கொடுத்தார். அப்பெண், கணவர் இடையே தவறான புரிதலை ஏற்படுத்தினார்.

மனுதாரரை நம்பி புகார்தாரர் நெருக்கமாக பழகினார். நெருக்கமான வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டினார். புகார்தாரர், 21 லட்சம் ரூபாய் மற்றும் 25 சவரன் நகைகளை மனுதாரரிடம் கொடுத்தார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பாலியல் குற்றத்திற்காக மனுதாரரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர், புகார்தாரர் திருமணமானவர்கள்; இருவருக்கும் குழந்தைகள் உள்ளனர். மனுதாரர் தரப்பு கூறியபடி அவரை ஓர் ஆண் விபசாரியாக புகார்தாரரால் பயன்படுத்தப்பட்டார். தங்களுக்குள் பாலியல் உறவு இருந்ததை புகார்தாரர் ஒப்புக்கொண்டார்.

விசாரணை


திருவள்ளுவரின் வார்த்தை கள், வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துகின்றன; வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கின்றன. 'சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை' - திருக்குறள்.

பெண்களை காவல் வைத்து காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும். அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது. நம் தார்மீக அறநெறிகளை இழக்கும் போது, அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய புகார்தாரர், மனுதாரருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாக கூறுகிறார்.

கைதான மனுதாரரை இன்னும் போலீசார் காவலில் கூட எடுக்கவில்லை. விசாரணையில் எதையும் கண்டுபிடிக்கவில்லை. எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச் சாட்டுகளுக்கு போதிய ஆவணம் இல்லை. ஒருமித்த பாலியல் உறவு பலாத்காரம் ஆகாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

போலீசார் எவ்வித ஆவணங்களையும் சேகரிக்காமல், மனுதாரரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரைத்துள்ளனர். வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

எந்த கோணத்தில் பார்த்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான காரணங்களை பூர்த்தி செய்யவில்லை. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கும் வகையில், குண்டர் சட்ட கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை


அரிதான வழக்குகளில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும். புகார்தாரரின், 'ஈகோ'வால், அவரை திருப்திபடுத்தும் நோக்கில் அச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருதுகிறது.

சட்டம் தனிநபரை திருப்திபடுத்துவதற்காக அல்ல. அதிகாரிகள் அதிகாரத்தை எப்படி தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதற்கு இவ்வழக்கு ஓர் அப்பட்டமான உதாரணம்.

அதிகளவு குண்டர் சட்ட கைது உத்தரவுகளை பிறப்பிக்கும் மாநிலம் தமிழகம். இது, சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதற்கான எளிதான வழி என அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதனால், தமிழகத்தில் அதிகம் பேர் குண்டர் சட்டத்தில் கைதாகின்றனர் என ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும். இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உள்துறை செயலர் பரிசீலித்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

இவ்வழக்கின் தன்மை, சூழ்நிலையை கருதி மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us