குடியிருப்போர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் வாழ்விட மேம்பாட்டு வாரியம் பரிசு
குடியிருப்போர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் வாழ்விட மேம்பாட்டு வாரியம் பரிசு
ADDED : மார் 26, 2024 09:02 PM
சென்னை:நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை, சிறப்பாக பராமரிக்கும் குடியிருப்போர் சங்கங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏழை மக்களுக்காக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்த குடியிருப்புகளில் வீடு பெறுவோர் அவற்றை முறையாக பராமரிப்பதில்லை.
வாரிய அதிகாரிகள் கட்டுப்பாட்டில், வீடுகளின் பராமரிப்பு பொறுப்பு இருப்பதால், இதில் தொய்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில் வாரிய குடியிருப்பு கட்டடங்கள் சிதிலமடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், 1.78 லட்சம் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்டுள்ளன. இந்த வளாகங்களை பராமரிப்பதை முறைப்படுத்த, 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' என்ற திட்டம் துவக்கப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும், வீடு ஒதுக்கீட்டாளர்களை உறுப்பினராக கொண்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சங்கங்களை பதிவு செய்வதற்கான தொகையையும், வாரியம் வழங்கி வருகிறது.
இது குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், பராமரிப்பு பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றின் பதிவுக்கான செலவையும் வாரியம் ஏற்றுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு குடியிருப்பு வளாக பராமரிப்புக்கு குறிப்பிட்ட தொகை, அங்கு வசிக்கும் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும். ஒவ்வொரு சங்கமும் வசூலிக்கும் தொகைக்கு இணையான தொகையை வாரியமும் மானியமாக வழங்கும். இந்த குடியிருப்போர் சங்கங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலும், முதல் மூன்று நிலைகளில் சிறப்பாக செயல்படும் குடியிருப்போர் சங்கம் தேர்வு செய்யப்படும்.
இதில், முதல் பரிசாக, 1 லட்சம் ரூபாய்; 2வது பரிசாக, 50,000 ரூபாய்; மூன்றாவது பரிசாக, 25,000 ரூபாய் வழங்கப்படும் என கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
இதன் அடிப்படையில் சிறப்பாக செயல்படும் சங்கங்களை தேர்வு செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. இதில், முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு விரைவில் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

