ADDED : ஏப் 30, 2024 03:49 AM
சென்னை: கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட தாமரைகுளம் இடத்தை, விமான நிலையங்கள் ஆணையம் நிராகரித்துள்ளது. எனவே, மாற்று இடத்தை தேர்வு செய்வதுடன், பயணியர் வருகை குறித்து ஆய்வு செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் கடைகோடி மாவட்டமாக கன்னியாகுமரி திகழ்கிறது. அம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட, உள்நாட்டு சுற்றுலா பயணியர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பலர் வருகின்றனர்.
பிற மாநில மற்றும் வெளிநாட்டு பயணியர், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து, சாலை மார்க்கமாக, 100 கி.மீ., துாரம் உள்ள கன்னியாகுமரிக்கு வருகின்றனர். அங்கிருந்து துாத்துக்குடி விமான நிலையமும், 105 கி.மீ., துாரம் உள்ளது.
அதிகளவில் சுற்றுலா பயணியரை ஈர்க்க, அம்மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கன்னியாகுமரி விமான நிலையத்திற்காக, அம்மாவட்டத்தில் அகத்தீஸ்வரம் தாலுகாவில், தாமரைகுளம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளை உள்ளடக்கிய இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தை பற்றிய விபரம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த ஆணையம், தாமரைகுளம் இடத்தை நிராகரித்துள்ளது. எனவே, புதிய இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

