கிராம நத்தம் நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது: ஐகோர்ட்
கிராம நத்தம் நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது: ஐகோர்ட்
ADDED : ஏப் 10, 2024 05:23 AM

சென்னை : 'கிராம நத்தம், புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்தவும், பொது நோக்கத்துக்கு பயன்படுத்தவும், அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டம் குரும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பானந்தன்; தன் வசமுள்ள, 5 சென்ட் கிராம நத்தம் நிலத்துக்கு பட்டா கோரி, மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தார்.
அந்த நிலம், அரசு நிலமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதால், விண்ணப்பத்தை நிராகரித்து கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு நிலமாக வகைப்படுத்தியதில் குறுக்கிட, உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் செல்வேந்திரன் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசின் கட்டுப்பாட்டில் கிராம நத்தம் நிலங்கள் இல்லை என, தனிநபர்கள் அவற்றை பெருமளவு அபகரித்துள்ளனர். கிராம நத்தம் நிலம் என்ற போர்வையில், நிலங்களை அபகரிப்பதை அனுமதித்தால், பொது பயன்பாட்டுக்கு அரசுக்கு நிலம் கிடைக்காது.
கிராம நத்தம் நிலங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலங்களை, சட்டப்படி பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில், ஒழுங்குபடுத்த வேண்டும்.
சட்டப்படி வீட்டுமனையை சொந்தமாக வைத்திருந்து, அதற்கு நத்தம் பட்டா வழங்கியிருந்தால், அதில் குறுக்கிட அரசுக்கு உரிமையில்லை. நத்தம் பட்டா வழங்கப்படாத நிலங்களை, யாராவது சொந்தமாக வைத்திருந்தால், அதற்கான உரிய ஆவணங்களை சரிபார்த்து பட்டா வழங்கலாம்.
நிலம் சொந்தம் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், அவரை ஆக்கிரமிப்பாளராக தான் கருத வேண்டும். பண பலம், ஆள் பலம், அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே, கிராம நத்தம் நிலங்களை பெருமளவில் வைத்திருக்க முடியும்.
அவ்வாறு வைத்திருப்பது, வீடு இல்லாத ஏழை எளியவர்களின் உரிமையில் குறுக்கிடுவது போலாகும். சமூக நீதி கொள்கையை மீறுவதாகும்.
தன் விருப்பத்துக்கு ஏற்ப நிலங்களை வழங்க, அரசுக்கு அதிகாரம் இல்லை. சரியான நபர்களுக்கு, சரியான காரணங்களுக்காக, கிராம நத்தம் நிலங்களை ஒதுக்குவதை உறுதி செய்யும் வகையில், வழிமுறைகள் இருக்க வேண்டும். அரசு நிலங்கள், நத்தம் நிலங்களை, மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்க வேண்டும்.
கிராம நத்தம் நிலங்களை அனுமதியின்றி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, அவர்களை வெளியேற்ற வேண்டும். அரசு புறம்போக்கு நிலம், கிராம நத்தம் நிலங்களுக்கு, நில ஆக்கிரமிப்பு சட்டம் பொருந்தாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.
கிராம நத்தம், புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுத்து, வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கும், பொது நோக்கத்துக்கும், கிராம நத்தம் நிலங்களை பயன்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை, குறிப்பிட்ட நிலம், ஏற்கனவே நில அளவை அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்டு விட்டது; தன்வசம் இருந்ததற்கான ஆவணம் எதையும், மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என, சிறப்பு பிளீடர் செல்வேந்திரன் தெரிவித்தார்.
வீடு இல்லாத ஏழை என்றால், அரசின் நல திட்டத்தின் கீழ், நிலம் ஒதுக்கும்படி, அரசிடம் மனுதாரர் விண்ணப்பிக்கலாம். அதை, விதிகளுக்கு உட்பட்டு அரசு பரிசீலிக்கலாம். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

